மதுரை, நவ. 03:
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் கண் காயங்கள், ஆரம்பத்தில் சாதாரணமாகத் தோன்றினாலும் பார்வை இழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமாக இருக்கலாம் என டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை எச்சரித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் தீபம் ஏற்றியும், இனிப்புகளைப் பகிர்ந்தும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகள் குறிப்பாக கண்களைப் பாதித்து கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். பட்டாசு வெடிப்பவர்களுக்கு மட்டுமின்றி, அருகில் நின்று வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் கண் காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவச் சேவைகள் பிரிவுத் தலைவர் டாக்டர் எஸ். ஸ்ரீனிவாசன் கூறுகையில், பட்டாசுகளால் ஏற்படும் கண் காயங்கள் வெளிப்புறத்தில் சிறியதாகத் தெரிந்தாலும், கண்ணின் உள் பகுதிகளையும் பாதித்து பார்வைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். எனவே, கண்ணில் காயம் ஏற்பட்டால் சிகிச்சையைத் தாமதப்படுத்தாமல் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும். கண்ணைத் தேய்ப்பது, அழுத்தம் கொடுப்பது, கண்ணுக்குள் சிக்கியுள்ள துகள்களைத் தாங்களாகவே அகற்ற முயற்சிப்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
பட்டாசுகளிலிருந்து வெளிப்படும் தீப்பொறிகள், சாம்பல் மற்றும் சிறிய துகள்களால் கருவிழியில் சிராய்ப்பு, கண் சிவத்தல், வலி, கண்ணீர் வடிதல், தீக்காயங்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மேலும், கண்ணுக்குள் அந்நியப் பொருட்கள் புகுதல், ரத்த நாளங்கள் சேதமடைந்து ரத்தக்கசிவு ஏற்படுதல், விழித்திரை பாதிப்பு போன்ற தீவிர பாதிப்புகளும் உண்டாகலாம். சில நேரங்களில் நிரந்தர பார்வை இழப்புக்கும் வாய்ப்புள்ளது. பட்டாசுகளை எப்போதும் திறந்தவெளியில் பாதுகாப்பான இடத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும். பட்டாசுகளைப் பற்ற வைக்கும்போது முகத்திற்கு அருகில் கொண்டுசெல்லக் கூடாது. வேடிக்கை பார்ப்பவர்கள் குறைந்தது 5 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். பட்டாசுகளைப் பற்ற வைக்கும் முன்பு கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றுவதுடன், எளிதில் தீப்பற்றாத பருத்தி ஆடைகள் மற்றும் காலணிகளை அணிய வேண்டும்.
முன்னெச்சரிக்கையாக அருகில் தண்ணீர் மற்றும் மணல் வாளிகளை வைத்திருக்க வேண்டும். பட்டாசுகளை குழந்தைகளுக்கு எட்டாத பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் பற்ற வைக்கவோ, அருகில் சென்று கையாளவோ கூடாது. பெரியவர்களின் கண்காணிப்பு இல்லாமல் குழந்தைகளைப் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. பட்டாசு விபத்தால் கண்ணில் புகை, தூசி அல்லது சாம்பல் விழுந்து எரிச்சல் ஏற்பட்டால் கண்ணைக் கசக்கக் கூடாது. சுத்தமான தண்ணீரில் கண்களைக் கழுவலாம். ஆனால், கண்ணுக்குள் துகள்கள் புகுந்திருந்தாலோ அல்லது ஏதேனும் பொருள் ஆழமாக ஊடுருவியிருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டாலோ, கண்ணைக் கழுவவோ அழுத்தம் கொடுக்கவோ கூடாது. மருத்துவரின் ஆலோசனையின்றி கண் சொட்டு மருந்துகள், களிம்புகள் மற்றும் வீட்டு வைத்திய முறைகளையும் பயன்படுத்தக் கூடாது.
கண் காயம் சிறியதாகத் தெரிந்தாலும், பார்வை தெளிவாக இருந்தாலும் மருத்துவப் பரிசோதனையைத் தாமதிக்கக் கூடாது. வலி, கண் சிவத்தல், பார்வை மங்குதல், கூச்சம், தொடர்ந்து கண்ணீர் வடிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும்.
தீபாவளியின்போது எதிர்பாராத விதமாக கண் காயம் ஏற்பட்டால் அவசர மருத்துவ உதவி வழங்க ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை (டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் ஒரு பிரிவு), மதுரை தயாராக இருப்பதாகவும், அவசர உதவிக்கு 95949 24048 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, கண் பார்வையைப் பாதுகாத்து ஆரோக்கியமான தீபாவளியைக் கொண்டாடுவோம்.


0 கருத்துகள்