சிக்கலான மற்றும் நுட்பமான மூளை அறுவை சிகிச்சையை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் குழு செய்து சாதனை


 பெருமூளை அனீரிசஸம் என்ற சிக்கலான பாதிப்பிருந்த 50 வயதான ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்று வதற்காக ‘டபுள் பேரல்’ பைபாஸ் அறுவை சிகிச்சை என்று அழைக்கப் படும் சிக்கலான மற்றும் நுட்பமான மூளை அறுவை சிகிச்சையை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக செய்தனர். 

 இது சம்பந்தமாக செய்தியாளர் சந்திப்பில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் மருத்துவர் வெங்கடேசன், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் தலைவரும் மற்றும் முதுநிலை நிபுணருமான டாக்டர்.செல்வமுத்துக் குமரன், உணர்விழப்பு மருந்தியல் துறை நிபுணர் டாக்டர்.செந்தில்குமார் ஆகியோர் கூறுகையில், திருநெல்வேலியைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர் தலைவலி, பேச்சு இழப்பு, வலது கண்பார்வை இழப்பு, இடது கை கால்களில் பலவீனம் போன்ற பல்வேறு பிரச்சனை களால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டார். இவருக்கு மூளையில் கடும் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து குடும்ப உறுப்பினர்களுக்கு இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் அதி நவீன அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. 

  அதிக சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை செய்து முடிப்பதற்கு ஏறக்குறைய 10 மணி நேரங்கள் தேவைப்பட்டது. மேலும் அறுவை சிகிச்சைக்கு பிறகு எதிர்மறை நிகழ்வுகள் ஏதும் இன்றி நோயாளியின் உடல் நன்றாக தேரியதன் காரணமாக அறுவை சிகிச்சைக்கு பின் பத்தாவது நாள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். முழுமையாக குணமடைந் திருக்கும் இந்த பெண்மணி அவரது வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் செய்ய தொடங்கி இருக்கிறார்.

 தமிழ்நாட்டில் இத்தகைய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் எங்களுக்கு பெருமையும் பெருமிதமும் அளிக்கிறது இவ்வாறு கூறினர். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மருத்துவமனையின் மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர்.பி.கண்ணன் உடன் இருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்