தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கின்றது- ஓ.பன்னீர்செல்வம்


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்கு பராமரிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் தலையீடு தடுத்து நிறுத்தப்பட்டு காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட தமிழக அரசுஅனுமதிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஓராண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் பட்டப் பகலில் கொலைகள் சரவசாதரணமாக நடைபெற்று வருகின்றன. பெண்கள், வியாபாரிகள், சிறு தொழில் புரிவோர், காவல் துறையினர், பாமர மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில், அரசுப் பேருந்தின் நடத்துனர், பயணி ஒருவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற செயல்கள் அன்றாடம் நடந்து வருவதன் காரணமாக தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் இருக்கின்ற ஒரு பேருந்திலேயே இதுபோன்ற தாக்குதல் நடக்கிறது என்றால், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணவே அச்சமாக இருக்கிறது. அரசுப் பேருந்து நடத்துனர் பெருமாளின் மரணத்திற்கு மது ஒரு காரணமாக இருந்தாலும், காவல்துறையினர் மீது இருந்த ஓர் அச்சம் தற்போது இல்லை. இதற்கு காரணம் காவல் துறையினரே பல்வேறு தாக்குதல்களுக்கு உட்படுவதும், அதற்குப் பின் அரசியல் தலையீடு இருப்பதும்தான். வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாகவும், காவல் துறையினரே அவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்தி வரும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீரழிந்து கிடக்கிறது.

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்ற இந்த வேளையில், தமிழக முதல்வர் உட்கட்டமைப்பில் உலகத்தரம், கல்வி, அறிவாற்றலில் பேராளுமைத் திறம், அன்றாடத் தேவைகளில் மக்களுக்கு மன நிறைவு, தொய்வு இல்லாத தொழில் வளர்ச்சி, அனைத்து சமூகத்தவர்களுக்கான மேம்பாடு, நிதி, சட்டம் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை ஆகிய 6 இலக்குகளை வைத்து செயல்படுவதாக தமிழக சட்டப் பேரவையில் பேசியிருக்கிறார். ஆனால் இந்த இலக்குகளை அடைவதற்கு அடித்தளமாக விளங்குவது சட்டம் ஒழுங்கு பராமரிப்பு என்பதை தமிழக முதல்வர் மறந்துவிட்டார்.

மேற்காணும் இலக்குகள் எய்த வேண்டுமென்றால், சட்டம் ஒழுங்கு நன்கு பராமரிக்கப்படவேண்டும். சட்டம் ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்பட வேண்டு மென்றால், அரசியல் தலையீடு தடுத்து நிறுத்தப்பட்டு காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். இதுதவிர, மதுக் கூடங்களை அமைக்க ஆர்வம் காட்டுவதற்குப் பதிலாக மதுக் கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை என்றைக்கு நடைபெறுகிறதோ அன்றைக்குத்தான் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் தாண்டவமாடும் ரவுடிகளின் ராஜ்யத்தை, சமூக விரோதிகளின் சாம்ராஜ்யத்தை, வன்முறையாளர்களின் வெறியாட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்