மதுரை சாலைகளில் மரண பயத்தைக் காட்டும் ஷேர் ஆட்டோக்கள்

 


மதுரையின் நீண்டகால சாலை போக்குவரத்து பிரச்சினையாக உருவெடுத்துள்ளது ஷேர் ஆட்டோக்கள். 3 பேருக்கு பதில் 10 பேரை ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் பறக்கும் ஷேர் ஆட்டோக்களால் அன்றாடம் விபத்துகள் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இவற்றையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய காவல்துறை வேடிக்கை பார்க்கிறது.

பஸ்கள் சென்றுவர இயலாத இடங்களில்கூட மக்கள் விரும்பிய இடங்களுக்கு நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் சென்று வர ஷேர் ஆட்டோக்கள் பெரும் உதவியாக இருந்தன. எங்கோ ஒரு மூலையில் நின்று கை காட்டினால்கூட பயணிகளை ஏற்றிச் சென்றனர் ஷேர் ஆட்டோக்காரர்கள். அதனால், மாநகர், புறநகர் பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் எண்ணிக்கை புற்றீசல்போல் அதிகரித்தன.   இந்த ஆட்டோக்களில் 3 பேருக்கு மேல் ஏற்றக்கூடாது. ஆனால், 10 பேர் முதல் 15 பேர் வரை புளி மூட்டைபோல் ஏற்றுகிறார்கள். அதற்காக இந்த சாதாரண ஆட்டோக்களில் டிரைவருக்கு பின் ஒரு இருக்கை, நடுவில் ஒரு இருக்கை, அவர்களுக்கு மேலே பின்புறம் ஒரு இருக்கை என்று டிரைவர்களே ஆட்டோக்களை மறுவடிவம் செய்துள்ளனர்.

அனைத்து ஆட்டோக்களும் விதிமுறைகளை மீறி ஷேர் ஆட்டோக்களாக மாற்றப்பட்டு, பயணிகளை அடைத்துச் செல்கின்றன. அந்த ஆட்டோக்களிலே மிகப்பெரிய எழுத்தில் 3 பேர் மட்டுமே அமர வேண்டும். மீறினால் ஆர்.டி.ஓ.,வுக்கு போன் செய்யலாம் என்று ஒரு குறிப்பிட்ட டோல் ப்ரீ தொலைபேசி எண் குறிப்பிட்டுள்ளனர். அந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதுதான் வேதனை.

சிக்கனல்கள், சாலைகளில் மூலைக்கு மூலை நின்று ‘ஹெல்மெட்’ போடாவிட்டால் துரத்திப்பிடித்து அபராதம் விதிக்கும் போலீஸார், தங்கள் கண் முன்பே பள்ளிக் குழந்தைகள், பெண்கள், பெரியவர்களை அடைத்துச் செல்லும் ஆட்டோக்களை கண்டும், காணாமல் கடந்து செல்கின்றனர். ஓட்டுநர் இருக்கையிலே 2 பேர் அமர்ந்து ஆட்டோக்கள் நகரச்சாலைகளில் பகிரங்மாகவே செல்கின்றன. அதையும் போக்குவரத்து போலீஸார் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். தினமும் ஓரிரு பேர் இறக்கின்றனர். பலர் படுகாயம் அடைந்து வருகின்றனர். 

ஷேர் ஆட்டோக்கள் மூலம் நல்ல வருவாய் கிடைப்பதால் பெரும் முதலாளிகள், 10 முதல் 30 ஷேர் ஆட்டோக்கள் வரை வாங்கி அதை ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.500 வீதம் நாள் வாடகைக்கு விடுகின்றனர். அவர்கள், இந்த 500 ரூபாய் வாடகை, டீசல் பணம் போக அதிக ‘டிரிப்’களை ஓட்டி லாபம் சம்பாதிக்கும் நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு சாலைகளில் வேகமாக பறக்கின்றனர். அந்த பதட்டத்தில் வேகத்தில் ரோட்டில் செல்வதால் அவர்களுக்கு எதிரே வரும் வாகனங்கள், பள்ளங்கள், சிக்கனல்கள் எதுவும் தெரியாது. யாரையும் தட்டிவிட்டால்கூட நிற்க மாட்டார்கள். சாலையோரம் எந்த பயணியாவது கை காட்டுகிறமாதிரி தெரிந்தால் எந்த சைகையும், சிக்கனலும் போடாமல் உடனே திரும்பி விடுவார்கள்.

பின்னால் வருகிற இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவார்கள். ஆனால், அப்போதும் கூட இவர்கள் என்ன நடந்து என்று கூட திரும்பிப்பார்க்க மாட்டார்கள். நகர்ப் பகுதியில் பயணிகளை ஏற்றி, இறக்க பஸ்நிறுத்தங்கள் உள்ளன. ஆனால் ஆட்டோ டிரைவர்கள், ரோட்டின் நடுப்பகுதியில் நின்று கொண்டே எங்கு போகிறார்கள் என்று யூகிக்க முடியாதபடி திடீரென்று திரும்புவார்கள். மதுரையில் ஷேர் ஆட்டோக்கள் நெறிப்படுத்தப்படுமா என்பதை இருசக்கர, 4 சக்கர வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. காவல்துறை கவனிக்குமா?

 


கருத்துரையிடுக

0 கருத்துகள்