சாட்டையடி சமூக மக்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல உதவிய சமூக ஆர்வலருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு


 மதுரையை அடுத்த சக்கிமங்கலம் எல்.கே.டி. நகா் பகுதியில் சாட்டையடித்தும், பூம் பூம் மாடு வைத்தும் பிழைப்பு நடத்தி வரக்கூடியவா்கள் ஏராளமானோா் வசிக்கின்றனா். சோளகா் என்ற பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த இவா்கள் தங்களது குழந்தைகளுக்கு ஜாதிச் சான்று கோரி தொடா்ந்து முயற்சி செய்து வருகின்றனா். பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தின்போது, இப் பகுதியினா் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை தொடா்பாக முறையிட்டனா். இதனையடுத்து எல்.கே.டி நகரில் சாட்டையடி மக்கள் வசிக்கும் பகுதியில் ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சக்திவேல் உள்ளிட்டோா் கடந்த செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, சாட்டையடி சமூக மக்களிடம் வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்தாா். மேலும், அவா்களது குழந்தைகளில் பலா் பள்ளி செல்லாதது தெரியவந்ததையடுத்து, அனைவரையும் பள்ளியில் சோ்க்குமாறு அறிவுறுத்தினாா். இதனைத் தொடர்ந்து  குழந்தைகள் பள்ளி செல்லாமல் வீட்டில் இருப்போரை ஒன்றினைத்து திரும்ப பள்ளிக்குச் செல்ல கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாணவர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து வாழ்த்து பெற்றனர்.  அவர்களுக்கு கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் சேவா ரத்னா டாக்டர். ஆ.மாயகிருஷ்ணன் எழுத்துப்பலகை, நோட்புக், பேனா, பென்சில் அழிப்பான்,  துணி பையுடன் கொடுத்து உதவினார். அவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஏற்பாடு செய்த சமூக ஆர்வலர்களை மாவட்ட ஆட்சியாளர் பாராட்டினார். இந்நிகழ்வில் காந்தி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஆனந்தன் மற்றும் ஊக்குவிக்கும் கலாம் வல்லரசு கார்த்திக் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்