மதுரை மாவட்ட அப்பள தொழிலாளர் மற்றும் கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா
சிஐடியு மதுரை மாவட்ட அப்பள தொழிலாளர் மற்றும் சி டபுள்யூ எப்ஐ கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. மாலை ஜீவா நகரில் பேரணியும் சோலை அழகுபுரம் வாஞ்சிநாதன் தெருவில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அப்பள தொழிலாளர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் எம்.பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற மே தின கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் சிஐடியு சிஐடியு மதுரை மாவட்ட செயலாளர் ஆர்.தெய்வராஜ், சிஐடியு மதுரை மாவட்ட தலைவர் எம்.கணேசன், சி டபுள்யூ எப்ஐ மாவட்ட செயலாளர் சி.சுப்பையா, ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் எம்.சிவபெருமாள், சங்க நிர்வாகிகள் எம்.கரிகாலன், எஸ்.ராஜா, டி.கதிரேசன், ஏ.குருசாமி, எம்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் சிறு, குறு தொழில்களும், தொழிலாளர்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். ஆளும் அரசுகளே, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி சிறு, குறு தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாத்திட வேண்டும், உடலுழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரிவான சமூக பாதுகாப்பு திட்டங்களை அமலாக்க வேண்டும், நலவாரிய அட்டையுள்ள அனைவருக்கும் கல்வி, திருமணம், விபத்து, பென்சன் போன்ற உதவிகளை காலதாமதமின்றி வழங்கிட வேண்டும் அப்பள தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும், கூலி உயர்வுக்கான பேச்சு வார்த்தை நடத்திடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்