மல்லிகை மணம் வீசும் இடத்தில் துர்நாற்றம் வீசும் அவலநிலை 6 மாத காலமாக அகற்றப்படாத கழிவுகள்- பா.ஜ.க. மாவட்டதலைவர் டாக்டர்.சரவணன் ஆய்வு

மதுரை மாட்டுத்தாவணியில் தென் தமிழகத்தின் முக்கியமான பூ மார்க்கெட் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மார்க்கெட்டிற்கு வந்து செல்கின்றனர். பூ வியாபாரத்தில் ஏராளமான பூக்களின் கழிவுகள், மற்ற வகைக் கழிவுகள் என தினமும் சுமார் ஒரு டன் குப்பைகள் வெளியேறுகின்றன. இந்தக் குப்பைகளை மாநகராட்சிப் பணியாளர்கள் தினமும் அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் பூ மார்க்கெட்டில் பல மாதமாக கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளதை மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர்.சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு வியாபாரிகளிடம் கேட்டறிந்தனர். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் டாக்டர்.சரவணன் கூறியதாவது, மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மனும், மதுரை மல்லியும்தான். ‘மதுரை மல்லியின் மணம் மதுரையில் மட்டும் மணக்கவில்லை, உலக அளவில்மணம் வீசிக்கொண்டுள்ளது.  சங்க காலம் முதல் உலக பிரசித்தி பெற்ற மதுரையில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட ‘பூ மார்கெட்’ நிலைமை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பூ மார்க்கெட்டின் கழிவுகள் அனைத்தும் கடந்த 6 மாதங்களாக அகற்றப்படாமல் ஒரே இடத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. அதனால் மிக மோசமான சுகாதார கேடு அமைய காரணமாய் இருக்கிறது. 

துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லை மூலமாய் அங்கே தினமும் வந்து செல்லும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோய் பரவ அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. அது போக கழிவுகள் மிகுதியாக உள்ள இடத்தில் பாம்பு தொல்லை இருப்பதால் உயிர் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கழிவுகளை அகற்ற வியாபாரிகள் மாதம் ரூபாய் 2 லட்சம் வரை கட்டணம் செலுத்தியும், பலமுறை புகார் அளித்தும் மதுரை  மாநகராட்சி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் சிறிதும் கண்டுகொள்வதில்லை ‘பூ வியாபாரி சங்கத்தின் சார்பாக மதுரை மாநகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மதுரை மேயர் என்ன செய்கிறார் என்று தெரியவில்ல. 

பூ மார்க்கெட்டில் வாகன நிறுத்துமிடம் முறையான பராமரிப்பு இல்லாததால் அனைவரும் வாகனங்களை சாலையில் நிறுத்துகின்றனர். அதனால் மாட்டுத்தாவணிக்கு செல்லும் வழியில் மிக அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பூ மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து சென்றாலும் போதுமான கழிப்பிட வசதிகள் இல்லை. இருக்கும் கழிவறைகளும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. மதுரை சுகாதார ஆய்வாளர்கள் வீடு தோறும் ஆய்வு செய்து சுகாதார முறைகேடு என்று கூறி அபராதம் விதிக்கின்றனர். ஆனால் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பூ மார்க்கெட்டினை முறையாக பராமரிக்காமல் இருப்பதற்கு யார் அபராதம் விதிக்கப்போவது? இவ்வாறு, மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் டாக்டர்.சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்