பிட்காயின் முதலீடு ! மதுரையில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட கும்பல்...


 மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் வசிக்கும் அனுராதா என்பவர் தனியார் டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டும் தன் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு மசாலா  பொடிகள் தயாரித்து விற்பனை செய்து  வந்த நிலையில் முகநூல் வாயிலாக ஐஸ்வர்யா என்கிற பெண் அறிமுகமாகி உள்ளார்.  

அனுராதாவிடம் ஐஸ்வர்யா தனக்கு சென்னையில் உள்ள பிட்ஸ் ஸ்மார்ட் என்கிற பிட் காயின் முதலீட்டு நிறுவனத்துடன் தொடர்பு உள்ளதாகவும், இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறிய ஆசை வார்த்தையை நம்பி அனுராதா வங்கி கடன்கள் வாங்கியும், வட்டிக்கு பணம் வாங்கியும் 8 லட்சம் ரூபாய் முதலீடு செய்து உள்ளார்.

துவக்கத்தில் முதலீடு செய்த பணத்திற்கு மாதம் மாதம் பிட்ஸ் ஸ்மார்ட் நிறுவனத்தை சேர்ந்த நிறுவனர் இருதயராஜ்  இவருடைய மனைவி நவரஞ்சனி, மகள்கள்  சாய்தணி, சாய் ஜனனி ஆகியோரிடம் பணத்தை வழங்கி உள்ளார். இதனால் நம்பிக்கை பெற்ற அனுராதா தனக்கு தெரிந்தவர்களிடம் பிட் காயின் முதலீடு குறித்து கூறியதால் 2 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 484 நபர்களிடம் இருந்து 7 கோடி ரூபாய் அளவில் பணம் பெற்று பிட் காயின் முதலீடு செய்து உள்ளனர். இதில் 5 கோடி ரூபாய் வரை திரும்ப அளிக்கப்பட்டு உள்ளது. முதலீடு மூலம் லாபமாக பெற்ற பணத்தை இருதயராஜ் கொடுத்த ஆசை வார்த்தையை நம்பி மறு முதலீடு செய்துள்ளனர்.

கடந்த எப்ரல் மாதம் முதல் இருதயராஜ் முதலீடு பணத்தை வழங்காததால் அனுராதா சாய்தணி, சாய் ஜனனி ஆகியோரிடம் பணத்தை திரும்ப வழங்கும்படி கேட்டுள்ளனர். அதற்கு இருவரும் வியாபாரத்தில் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது எனவும் பணம் தரமுடியாது என்றும் மீண்டும் பணத்திற்காக எங்களை தொடர்பு கொண்டால் கொலை செய்யவும் தயங்கமாட்டோம் என மிரட்டியது மட்டுமல்லாமல் போலீஸிடம் சென்றால் மோசமான விளைவுகளை நீங்கள் அனைவரும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையும் செய்து உள்ளார்கள்.

இதனால் என்ன செய்வது என்று அறியாமல் அனுராதா மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் முதலீடு செய்த அசல் தொகையான 2 கோடியே 75 லட்சத்து 18 ஆயிரத்து 905 ரூபாயினை பெற்றுத் தரும்படி  புகார் மனு அளித்துள்ளார். 

பிட்காயினில் முதலீடு செய்ய வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை: 29 Dec 2017 

 பிட்காயினில் முதலீடு செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிட்காயின் எனப்படும் இணையதள வழி பணம் சட்ட அங்கீகாரம் பெற்றதல்ல எனக் கூறி மத்திய நிதியமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிட்காயினில் முதலீடு செய்து இழப்பை சந்திப்பவர்களுக்கு எவ்வித சட்டப்பாதுகாப்பும் இருக்காது என்றும் அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் பிட்காயின் பயன்படுத் தப்படுவதாகவும் அதற்கு உண்மையான மதிப்பு என எதுவும் கிடையாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்