மேம்பட்ட மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மூலம் வலிப்புத்தாக்க நோயாளிக்கு வலிப்பு இல்லாத புது வாழ்க்கையை வழங்கியிருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை
தென் தமிழ்நாட்டில் முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC), Vagal Nerve Stimulation (VNS) என்ற தனித்துவமான மூளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது.
வலிப்பு தாக்கங்களை கட்டுப் படுத்துவதற்காக செய்யப்படும் தனித்துவமான மூளை நரம்பியல் அறுவை சிகிச்சையான இந்த VNS, மதுரையைச் சேர்ந்த 33 வயதான ஒரு ஆண் நபருக்கு சமீபத்தில் செய்யப் பட்டிருக்கிறது. ஓராண்டுக்கு முன்பு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதற்கு பிறகு மருந்துகளுக்கு கட்டுப்படாத வலிப்புத்தாக்க பாதிப்பினால் இந்நபர் கடும் அவதிப்பட்டு வந்தார்.
பொது உணர்விழப்பு மருந்தின் கீழ் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சைக்கு ஏறக்குறைய 2 மணி நேரங்கள் எடுத்தது. அறுவை சிகிச்சை முடிந்ததிலிருந்து 5 நாட்களுக்குள் இந்நோயாளி மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பிறகு வழக்கமான செயல்பாடுகள் அனைத்தையும் முன்புபோல இவரால் மேற்கொள்ள முடிந்திருக்கிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு முன்பு வரை ஒரு வாரத்தில் எண்ணற்ற வலிப்புத் தாக்கங்கள் இந்நோயாளிக்கு வருவதுண்டு. எனினும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடந்த 6 மாதங்களில் வலிப்புகளே வராத வாழ்க்கையை இவர் இப்போது வாழ்ந்து வருகிறார். வலிப்புத் தாக்கத்திற்கு எதிரான 7 மருந்துகளை முன்பு எடுத்து வந்த நிலையில், இப்போது வெறும் மூன்று மருந்துகளை மட்டும் உட்கொண்டு வந்தால் போதுமானது.
மூளை நரம்பியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். டி.சி.விஜய் ஆனந்த் மற்றும் மூளை நரம்பியல் துறையின் நிபுணர் டாக்டர்.எஸ். நரேந்திரன் ஆகியோரது தலைமையில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவர்களால் இந்த அறுவை சிகிச்சைக்கு மிகத் துல்லியமான திட்டம் உருவாக்கப்பட்டது. மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர்.கே.செல்வமுத்துக்குமரனால் இந்த VNS சிகிச்சை முறை மேற்கொள்ளப் பட்டது. நோயாளிக்கு மிகச்சிறப்பான சிகிச்சை விளைவுகள் கிடைப்பதற்கு இந்த அறுவை சிகிச்சை வழி வகுத்திருக்கிறது.
இந்த நோயாளியின் உடல்நிலை குறித்து பேசிய டாக்டர்.எஸ்.நரேந்திரன், “அறுவை சிகிச்சைக்கு முன்பு தேவைப்படும் அனைத்து பரிசோதனைகளையும் செய்து, வலிப்புத்தாக்க மேலாண்மைக்கு VNS சிகிச்சை முறையை நாங்கள் பரிந்துரைத்தோம். மூளையின் குறிப்பிட்ட சில செல்கள் தவறாக செயல்பட்டு, உடலின் தகவல் பரிமாற்ற அமைப்பை ஒழுங்கற்ற குழப்பநிலைக்கு ஆளாக்கி விடுகிற போது, வலிப்புத்தாக்கம் ஏற்படுகிறது. இந்தியாவில் வலிப்புத் தாக்கம் என்பது, மிகப் பொதுவான பாதிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 10 இலட்சம் நபர்களுக்கு இப்பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுகிறது. உலகளவில் 70 மில்லியன் வலிப்புத்தாக்க பாதிப்புள்ள நோயாளிகள் இருக்கின்ற நிலையில். இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 12-14 மில்லியன் மக்கள் இதனால் அவதிப்படுகின்றனர். வலிப்புத்தாக்க நோயாளிகளுள் ஏறக்குறைய மூன்றில் இரு பங்கு நபர்களுக்கு அவர்களது பாதிப்பு நேர்வுகளை கட்டுப்படுத்தி, அவை இல்லாமல் வாழ்வதற்கு வலிப்புத் தாக்கத்திற்கு எதிரான மருந்துகளே போதுமானவை. இருப்பினும் அனைத்து நோயாளிகளும் இந்த மருந்துகளுக்கு சரியாக பதில் வினையாற்றுவதில்லை. வலிப்புத்தாக்க நேர்வுகளை குறைப்பதற்கு VNS சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகள் அவர்களுக்கு அவசியமாக இருக்கும்,” என்று கூறினார்.
VNS சிகிச்சை முறை பற்றி டாக்டர்.செல்வமுத்துக்குமரன் பேசுகையில், “VNS சிகிச்சையில் பேஸ்மேக்கர் அளவுள்ள ஒரு சாதனம் மார்பு பகுதியின் சருமத்திற்கு கீழே இம்பிளான்ட் செய்யப்படுகிறது. இச்சாதனத்திலிருந்து ஒரு லீட், இடது வேகல் நரம்புடன் இணைக்கப்படுகிறது. மூளையின் செய்திகளை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்ற மற்றும் உடலின் பிற பகுதிகளிலிருந்து மூளைக்கு செய்திகளை கொண்டு செல்கின்ற இரு வேகல் நரம்புகளுள் இது ஒன்றாகும். இம்பிளான்ட் செய்யப் படுகின்ற சாதனம், குறிப்பிட்ட கால அளவுகளில் வேகல் நரம்புகள் வழியாக மூளைக்கு மின் தூண்டுணர்வுகளை அனுப்புகிறது. குறிப்பிட்ட கால அளவிலான இந்த தூண்டுதல், வலிப்பு நோயாளிகளுக்கு, வலிப்புத்தாக்க நேர்வுகளின் எண்ணிக்கையையும் மற்றும் அதன் தீவிரத்தையும் குறைக்க உதவுகிறது.
உலகளாவிய ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள், வலிப்புத்தாக்க விகிதங்களை ஏறக்குறைய பாதியளவிற்கு குறைக்க VNS செயல்முறை உதவுகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன. இதன் பேட்டரி 6-11 ஆண்டுகள் வரை நீடித்து செயல்படக் கூடியதாகும். மேலும் மற்றொரு எளிய அறுவை சிகிச்சை மூலம் இந்த பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம். இச்சாதனம் மற்றும் இச்சிகிச்சைக்கான மொத்த செலவு ரூ.3.5-5 இலட்சத்திற்கு இடைப்பட்டதாக இருக்கும். VNS சிகிச்சைக்குப் பிறகு நோயாளி இதுவரை எடுத்து வந்த வலிப்புக்கு எதிரான மருந்துகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளலாம்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மூளை நரம்பியல் துறையின் முதுநிலை நிபுணர் மற்றும் தலைவர் டாக்டர். டி.சி.விஜய் ஆனந்த், மருத்துவ நிர்வாகி டாக்டர். பி.கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர் .
0 கருத்துகள்