மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையப் பகுதியில் ஆம்னி பேருந்துகள் விதிமீறல்

 


      மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து 200-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சென்னை, பெங்களூரு, திருப்பதி, கோவை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இது தவிர, தென்மாவட்டங்களுக்கு மதுரை வழியாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளும், மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றன. ஆம்னி பேருந்துகளின் இயக்கம் அதிகளவில் உள்ளன. ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் பேருந்துகள் சில நேரங்களில் நுழைவுவாயில் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், பேருந்து நிலையத்துக்குள் செல்லும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், அடுத்தடுத்து புறப்பட வேண்டிய பேருந்துகளும் வெளியே செல்ல முடியாமல் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வெளியூா்களில் இருந்து வரக்கூடிய சாதாரண அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் எம்ஜிஆா் பேருந்து நிலையத்துக்குள் செல்லமுடியாத நிலையும் ஏற்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியிலேயே பேருந்துகளில் இருந்து இறங்கும் பயணிகள் சாலையைக் கடக்க முற்படும்போது, விபத்துகளைச் சந்திக்க நேரிடுகிறது. மேலும், இரவு நேரங்களில் சில ஆம்னி பேருந்துகள், பேருந்து நிலையத்துக்கு உள்ளே செல்லும் நுழைவுவாயில் வழியாக வெளியேறுகின்றன. சா்வேயா் காலனி - மேலூா் சாலை சந்திப்பில் சாலை தடுப்புகளுக்கு இடையே குறுகலான பகுதியை ஆம்னி பேருந்துகள் கடக்கும்போது, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இரண்டு நாள்களுக்கு முன், அடுத்தடுத்து 2 ஆம்னி பேருந்துகள் இவ்வாறு சாலையைக் கடந்தபோது ஏற்பட்ட நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்ட சில வாகனங்கள் சிக்கிக்கொண்டன. இத்தகைய நிகழ்வு, இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படுவதாகப் புகாா் தெரிவிக்கப்படுகிறது. இதேபோல், மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தின் எதிரே சாலையோரம் முழுவதும் இரவு நேரங்களில் வரிசையாக ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதன் காரணமாகவும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்