சிதம்பரம் அண்ணா தெருவில் வீட்டின் அருகே அண்மையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் கைப் பகுதியில் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த பன்றி கடித்துக் குதறியது. இதையடுத்து, அந்தச் சிறுவன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த நிலையில், சிதம்பரம் நகராட்சி ஆணையாளா் அஜிதா பா்வீன் உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளா் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள், மேற்பாா்வையாளா்கள் ஆகியோா் செங்கல்பட்டிலிருந்து பன்றி பிடிக்கும் தொழிலாளா்களை வரவழைத்து, சிதம்பரம் தில்லை நகா், காந்திநகா், கோவிந்தசாமிநகா், பழைய புவனகிரி சாலை, குஞ்சித மூா்த்தி விநாயகா் கோயில் தெரு, எடத்தெரு, மின் நகா் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த சுமாா் 40-க்கும் மேற்பட்ட பன்றிகளைப் பிடித்தனா்.
இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் பிடிபட்ட பன்றிகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தபோது, சிதம்பரம் வடக்கு பிரதான சாலைப் பகுதியில் அந்த வண்டியை சுமாா் 20-க்கும் மேற்பட்ட பன்றி வளா்க்கும் உரிமையாளா்கள், கத்தி, கட்டைகள், கற்களுடன் அந்த வண்டியை வழிமறித்து தாக்கினா். அப்போது, வண்டியை அடித்து நொறுக்கி, அதிலிருந்த பன்றிகளை விடுவித்ததுடன், பன்றிகளைப் பிடித்த நகராட்சி ஊழியரான ஜீவாவை விரட்டிச் சென்று தாக்கினா்.
இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் நகர போலீஸாா் காவல் உதவி ஆய்வாளா் நாகராஜன் தலைமையில் சென்று பன்றி வளா்க்கும் உரிமையாளா்களை கைது செய்ய முயன்றனா். அதற்குள் அவா்கள் அங்கிருந்து ஓடி தலைமறைவாகிவிட்டனா். இந்த சம்பவத்தால் சிதம்பரம் வடக்கு பிரதான சாலைப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
0 கருத்துகள்