இந்திய அளவில் முக்கிய சுகாதார குறியீடுகளில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் 99.8 சதவிதம் பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் தகுதியும், பயிற்சியும் பெற்றவர்களால் நடத்தப் படுகிறது. இத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத் தப்பட்டாலும், பலரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய திட்டமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் உள்ளது.
இத்திட்டத்திற்கு 2022-23ம் ஆண்டிற்கு ரூ. 1, 547 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
இதையடுத்து இந்த திட்டம் முதலமைச் சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசின் சுகாதாரத்துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதலமைச் சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- க்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும். அவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று, விண்ணப்பிக்க வேண்டும். அங்கு சான்றிதழ்களை சரிபார்த்து, குடும்ப தலைவரின் புகைப்படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதைத் தொடர்ந்து 22 இலக்க எண் கொடுப்பார்கள். காப்பீட்டு அட்டை வருவதற்கு முன்னதாக, மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், 22 இலக்க எண்ணைக் கொண்டு, சிகிச்சை பெறலாம். குடும்ப தலைவர் காப்பீட்டு அடை பெற்றால், அவருடைய சட்டப் பூர்வமான மனைவி/கணவர், குழந்தைகள், பெற்றோர்கள் இத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம். ஆனால், அவர்கள் பெயர்கள், குடும்ப அட்டையில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள தாலுகாக் களின் எண்ணிக்கை 11 ஆனால் மருத்துவ காப்பீட்டுக்கு திட்டத்திற்கு பதிவு செய்யும் இடம் மட்டும் ஒன்று. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர். நாளுக்கு நாள் விபத்து புதிய புதிய நோய்கள் என மக்கள் பல துன்பத்திற்கு ஆளாகும் நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சர் மருத்துவ காப்பீடு மையத்தில் தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து காத்திருப்பதை பார்க்க முடிகிறது.
ஒரு நாளைக்கு குறைந்த எண்ணிக் கையில் மட்டுமே காப்பீடு அட்டை பதிவு செய்யப் படுகிறது ஒவ்வொரு நபர்களுக்கும் இரண்டு மாதம், மூன்று மாதம் என தேதி குறிப்பிடப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. மூன்று மாதம் கழித்து அந்த நபர்கள் வரும்போது காலை முதல் மாலை வரை அங்கேயே காத்திருக்கும் அவல நிலை உருவாகிறது. பதிவேற்றம் செய்பவர் ஒருவர் மட்டுமே உள்ளார் அதனால் அதிக மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது என அங்கு வரும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வயதானவர்கள் அன்றாடும் கூலி வேலை செய்பவர்கள் கைக்குழந்தைகளோடும் அங்கு வந்து அவர்கள் காத்திருப்பது வேதனை அளிக்கிறது பதிவு செய்பவரிடம் சீக்கிரம் எங்களை அனுப்பி வையுங்கள் காலையில் வந்தோம் எனக் கூறினால் எனக்கு இரண்டு கை தான் உள்ளது ஆயிரம் கை இல்லை காப்பீடு அட்டை வேண்டுமென்றால் காத்திருங்கள் இல்லை என்றால் போய்விடுங்கள் என கடித்துக் கொள்கிறார் எனவும் கூறுகின்றனர்.
ஒரு நாள் சம்பளத்தை இழப்பது மட்டுமின்றி உணவு அருந்த சென்றால் ஒருவேளை நம்மளை கூப்பிட்டால் அந்த நபர் இல்லை என்று வேறொரு நாள் வரும்படி கூறி விடுவார்களோ என்று உணவு அருந்தாமல் பசியோடு அங்கேயே காத்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் பல பேர் வீட்டில் இருந்து உணவை கட்டிக்கொண்டு அலுவலக வாசலில் அமர்ந்து உண்ணுவதையும் பார்க்க முடிகிறது மருத்துவ காப்பீடு பதிவு செய்வதற்குள் எங்கள் உயிர் போய்விடும் போல என ஆதங்கப்படுகின்றனர்.
மக்களின் உயிர் காக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்ததை வரவேற்கிறோம் ஆனால் அதை முழுமையாக செயல்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாளில் மக்கள் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ மருத்துவ காப்பீடு திட்டத்தின் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பதையும், நிற்க முடியாமல் அங்கு அமர்ந்து இருப்பதையும் காண முடிகிறது.
இப்படி மக்களை பல இன்னலுக்கும் துன்பத்திற்கும் ஆளாக்காமல் அரசு எளிமையான முறையில் மக்களின் உயிர்காக்கும் இந்த திட்டத்தை மதுரை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகா வாரியாக கூடுதல் மருத்துவ காப்பீடு மையத்தை ஏற்படுத்தி தகுதி உள்ள அனைவருக்கும் முழுமையாக இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
அரசு ஒரு திட்டத்தை அறிவிக்கும் போது அல்லது செயல்படுத்தும் போது அதில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் அனைத்து திட்டமும் மக்களுக்குத்தான் உருவாக்கப்படுகிறது அப்படி இருக்கும் நிலையில் அது முழுமையாக மக்களை சென்று அடைகிறதா அல்லது குறைபாடுகள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். மக்களுக்கான திட்டம் மக்களை சென்று அடைவதற்கு பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர் என தெரியவரும் பட்சத்தில் உடனடியாக அதற்கு தீர்வு காணும் வகையில் அரசு முனைப்போடு செயல்பட்டால் தான் மக்களின் பெரும் ஆதரவை அந்த அரசு பெற முடியும்.
அதேபோல் அரசு எந்த ஒரு மக்களுக்கான திட்டத்தை கொண்டு வந்தாலும் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டுமென்றால் அது அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு இருக்க வேண்டும் மக்களுக்காகத்தான் அரசும், அதிகாரிகளும் ஆகையால் மக்களின் உயிர் காக்கும் இந்த மருத்துவ திட்டத்தை எளிமையாக மக்களை சென்றடைய தமிழக அரசு விரைந்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது சம்பந்தமாக சமூக ஆர்வலரான து.நாகேஸ்வரனும், காங்கிரஸ் சேவா தளம் எட்டயபுரம் எம்.அய்யனார் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கையை பொது மக்கள் சார்பாக அளித்துள்ளதாக கூறினர்.
0 கருத்துகள்