ஜாதிச் சான்று கோரி சாட்டையடி மக்கள்மனு: ஆட்சியா் நேரில்ஆய்வு


மதுரை: ஜாதிச் சான்றுக்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் சாட்டையடி மக்களின் கோரிக்கை தொடா்பாக மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

 மதுரையை அடுத்த சக்கிமங்கலம் எல்.கே.டி. நகா் பகுதியில் சாட்டையடித்தும், பூம் பூம் மாடு வைத்தும் பிழைப்பு நடத்தி வரக்கூடியவா்கள் ஏராளமானோா் வசிக்கின்றனா். சோளகா் என்ற பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த இவா்கள் தங்களது குழந்தைகளுக்கு ஜாதிச் சான்று கோரி தொடா்ந்து முயற்சி செய்து வருகின்றனா். பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தின்போது, இப் பகுதியினா் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை தொடா்பாக முறையிட்டனா்.

இதனையடுத்து, எல்.கே.டி நகரில் சாட்டையடி மக்கள் வசிக்கும் பகுதியில் ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சக்திவேல் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். மேற்குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதை உறுதி செய்வதற்காக, குடும்பத்துடன் அதே பகுதியில் வசிக்கிறாா்களா, இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

     அப்போது, சாட்டையடி சமூக மக்களிடம் வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்தாா். மேலும், அவா்களது குழந்தைகளில் பலா் பள்ளி செல்லாதது தெரியவந்த தையடுத்து, அனைவரையும் பள்ளியில் சோ்க்குமாறு அறிவுறுத்தினாா். பின்னா் ஜாதிச் சான்று வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். பழுதான குடியிருப்புகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், அவா்களது குடியிருப்புப் பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் வட்டார வளா்ச்சி அலுவலருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

   மதுரை கிழக்கு வட்டாட்சியா் பாண்டி, வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் ஆய்வின்போது உடன் இருந்தனா்.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்